ரஜினியின் 63-வது பிறந்தநாளில் அவரது பிறந்தநாள் பரிசாக ஏ.வி.எம்., நிறுவனம் தந்திருக்கும் படம்தான் "சிவாஜி 3டி". கதை என்னவோ சில வருடங்களுக்கு முன் வெளிவந்த அதே சிவாஜி படத்தின் கதை தான்!
காட்சிகளும் அதேதான் என்றாலும் எடிட்டிங்கில் எக்கச்சக்கமாய் கத்தரிக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு "நச்" என்று மேலும் பிரமாண்டமாய் ரசிகர்களை "டச்" செய்கிறது "சிவாஜி 3டி". என்பது தான் ஹைலைட்!
"சஹானா..." பாடல் காட்சியில் ரஜினி ஆப்பிளை தூக்கி எறிவதும், அது ரசிகர்களை நோக்கி வருவதும் தியேட்டரில் கைதட்டல் ஓசையும், விசில் சப்தமும் காதை பிளக்கிறது.
அதேமாதிரி படத்தின் க்ளைமாக்ஸ்க்கு முன்பு வில்லன் சுமன் மற்றும் அவரது அடியாட்களுடன் ரஜினி மோதும் காட்சியில், மொட்டை மாடியில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான பணம், காற்றில் பறந்து வந்து ரசிகர்கள் மீது பணமழை பொழிவது போன்ற உணர்வு ஏற்படுவதும் பிரமாதம்.
3டி எபெக்ட், டால்பிஅட்மாஸ் சவுண்ட் என்று நவீன தொழில்நுட்பங்களால் ரஜினியின் உடலும், குரலும் ரசிகர்களின் மிக அருகில் மேலும் அருகில் வருவது போன்ற பிரம்மை படத்தின் வெற்றிக்கு மேலும் வித்திடும்! ரஜினியின் ஸ்டைலையும், வேகத்தையும் மேற்படி 3டி உள்ளிட்ட நவீன வசதிகளில் கண்டுகளிப்பதே அலாதியான அனுபவம் என்றால் மிகையல்ல!
பாடல்காட்சிகளில் ஸ்ரேயாவின் கவர்ச்சி பிரம்மாண்டங்களும், கண்களுக்கும், மனதிற்கும் மிக அருகில் வருவதும் சிவாஜி 3டி சிறப்புகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்!
சண்டைகாட்சிகளில் ரஜினி அடிக்கும் ஒவ்வொரு அடியும் இடியாக இறங்குகிறது. அதே நேரம் 3டி எபெக்ட் செலவுகளை கருத்தில் கொண்டு ஒரு சில சண்டைகள் நீக்கப்பட்டிருப்பது சண்டை பிரியர்களுக்கு சற்றே ஏமாற்றத்தை தந்தாலும், 2007ம் வருடம் வெளிவந்த சிவாஜியை காட்டிலும் பல மடங்கு பளபளப்பாகவும், சிலிர்ப்பாகவும் இருக்கிறது "சிவாஜி 3டி" என்பது குறிப்பிடத்தக்கது.
ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட டெக்னீஷியன்கள் 5 ஆண்டுகளுக்கு முன்பே இப்படம் பின்நாளில் 3டியில் வெளிவரும், டால்பி அட்மாஸ் சவுண்டில் சக்கைபோடும் என திட்டமிட்டே பணிபுரிந்து இருப்பார்கள் போலும்... அத்தனை அழகாக, மேற்படி நவீன தொழில்நுட்பங்களால் மிரட்டுகிறது "சிவாஜி 3டி" என்றால் அது எள்ளவும் பொய்யில்லை எனலாம்!
மொத்தத்தில், "சிவாஜி 3டி", உலகளாவிய ரஜினி ரசிகர்களின் "உள்ளத்திருடி!"
0 comments:
Post a Comment