‘மின்னலே’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ என கவுதம் மேனனின் காதல் படங்கள் வரிசையில் வந்த இன்னொரு படம்தான் ‘நீதானே என் பொன்வசந்தம்’.
2-ம் வகுப்பு படிக்கும்போதே ஜீவாவும், சமந்தாவும் நண்பர்களாக இருக்கின்றனர். பிறகு சிறு பிரச்சினையில் இருவரும் சண்டைபோட்டு பிரிகிறார்கள். மீண்டும் 10-ம் வகுப்பு படிக்கும்போது ஒரே பள்ளிக்கூடத்தில் படிக்கின்றனர். பழைய பகையை மறந்து மீண்டும் நட்பாக பழகுகின்றனர். இந்த நட்பு 11-ம் வகுப்பு வரை தொடர்கிறது. அதன்பின் மீண்டும் சண்டை போட்டு பிரிகின்றனர்.
அதன்பிறகு தொடர்பே இல்லாமல் இருக்கும் இவர்கள் இருவரும் பல கல்லூரிகள் பங்கேற்கும் விழாவில் நேரிடையாக சந்திக்கின்றனர். அப்போது, தங்களுடைய பகையை மறந்து நெருக்கமாக பழகுகின்றனர். இதனால் இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது. கல்லூரி முடிந்து வெளிவந்த பின்பும் தொடர்ந்து காதலிக்கிறார்கள். ஒருகட்டத்தில் இவர்களுக்குள் மீண்டும் பிரச்சினை வர சண்டைபோட்டு பிரிகிறார்கள்.
பல வருடங்கள் கழித்து, தனது காதலியான சமந்தாவை பார்க்க ஒரு கடலோரக் கிராமத்திற்கு ஜீவா வருகிறார். அங்கு இருக்கும் சமந்தாவை சந்திப்பதற்காக 10 நாட்கள் அங்கேயே தங்கிவிடுகிறார். சமந்தாவை சந்தித்து பேசும்போது, அப்போதும் இருவருக்கும் சண்டை வருகிறது. அதனால், மறுபடியும் பிரிந்து செல்கிறார்கள்.
சில மாதங்கள் கழித்து சென்னையில் மீண்டும் சந்திக்கின்றனர். அப்போது தனக்கு அடுத்த மாதம் கல்யாணம் நடக்கப்போவதாக சமந்தாவிடம் ஜீவா சொல்கிறார். அதைக்கேட்டு சமந்தா பிரமிப்படைகிறார்.
இறுதியில் ஜீவாவுக்கு கல்யாணம் நடந்ததா? அல்லது ஜீவா-சமந்தா காதல் ஒன்று சேர்ந்ததா? என்பதே மீதிக்கதை.
கதையே இல்லாமல் ஒரு படம் எவ்வாறு எடுப்பது என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம். பள்ளி மாணவன், கல்லூரி மாணவன், உத்யோகம் பார்க்கும் இளைஞன் என மூன்றுவித கெட்டப்புகளில் வலம் வருகிறார் ஜீவா.
இளைஞனாக கவர்ந்த ஜீவா மாணவ பருவத்தில் நம்மை ஈர்க்கவில்லை. 14 வயதில் எப்படி இருந்தாரோ அதுபோலவே 26 வயதிலும் இருக்கிறார். எப்போதும் ஒருவித டல்லாகவே இருக்கிறார். நடிப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
நித்யாவாக சமந்தா நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார். அழகின் மொத்த உருவமாய் பளிச்சிடுகிறார். பள்ளி மாணவியாக குறும்பு செய்வதிலும், கல்லூரி மாணவியாக காதல் கொள்வதிலும், இளைஞியாக காதலில் பிரிந்த சோகத்தை வெளிப்படுத்துவதிலும் நவரசங்களை தன்னுடைய நடிப்பால் பிழிந்தெடுத்திருக்கிறார். சமந்தாவிடம் எதிர்பார்க்காத நடிப்பை ரொம்பவும் அசாத்தியமாய் செய்திருக்கிறார்.
முதல் பாதியில் பின்னணி இசை இல்லாமல் தொய்வில் போகும் திரைக்கதையை தூக்கி நிறுத்துகிறார் சந்தானம். இவர் அடிக்கும் கமெண்டுக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது. குறிப்பாக ‘பொண்ணுங்களும் கியாஸ் பலூனும் ஒண்ணு, விட்டா பறந்துருவாங்க’ என்று இவர் சொல்லும்போது கைதட்டல்கள் காதை பிளக்கிறது. இவருக்கு ஜோடியாக வரும் அந்த குண்டுப் பெண்ணும் நம்மை கவனிக்க வைக்கிறார்.
இயக்குனர் கவுதம்மேனனுக்கு காதல், பிரிவு என இரண்டையும் பிரதானமாக வைத்து திரைக்கதையை நகர்த்துவதில் வெற்றிகரமான அனுபவம் இருப்பதால் அதை எளிதாக கையாண்டிருக்கிறார். வருண்-நித்யா கதாபாத்திரங்களை நம்முடன் உலவவிட்டிருக்கிறார். படத்தில் முதல் 10 நிமிடங்கள் டப்பிங்படம் போல் கதையை நகர்த்தியிருக்கிறார்.
எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு படத்திற்கு தேவையான உணர்வை கொடுத்திருக்கிறது. இசைஞானியின் இசையில் ஏற்கெனவே பாடல்கள் ஹிட்டாகிவிட்டது. அதை எப்படி படம் பிடித்திருப்பார்கள் என்ற ஆவலோடு வந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. அனைத்து பாடல்களும் மாண்டேஜூகளாக கொடுத்து ஏமாற்றம் அளித்திருக்கிறார். பின்னணி இசையும் பெரிதாக சொல்வதற்கில்லை.
கவுதம் மேனனின் படங்களில் வசனம்தான் படத்திற்கு பெரிய பலமாக இருக்கும். அதுமட்டுமே இந்த படத்தில் இருப்பது இப்படத்திற்கு பலவீனமாக உள்ளது. வசனங்களுக்கேற்ற ஆழமான காட்சிகள் இல்லை. காட்சிகள் அனைத்தும் செயற்கையாகவும், நாடகத்தனமாகவும் இருக்கின்றன. இவையெல்லாம் படம் முழுக்க இருப்பதால் படத்தை ரசிக்கமுடியாமல் போய்விட்டது.
மொத்தத்தில் ‘நீதானே என் பொன்வசந்தம்’ வசந்தமில்லை.
0 comments:
Post a Comment