சேலத்தில் இருந்து, தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு, தலைவா படத்தின் "சிடிக்கள் சப்ளை செய்யப்பட்டதை, விஜய் ரசிகர்கள் கண்டுபிடித்து, போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.
அதை அடுத்து, 30 ஆயிரம் தலைவா பட "சிடிக்களை, போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் விஜய் நடித்த "தலைவா படம் ஆகஸ்ட், 9ம் தேதி தியேட்டர்களில் திரையிடுவதாக இருந்தது. அந்த படத்தை திரையிடும் தியேட்டர்களுக்கு, வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால், "தலைவா படம் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டது.
கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மும்பையில் "தலைவா படம் வெளியானது. தமிழகத்தில் திரையிடப்படததால், அந்த படத்தின் திருட்டு "சிடிக்கள், சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள அத்வைத ஆஸ்ரம ரோட்டில் இயங்கும், "சிடி கடை அருகில் உள்ள வீட்டில் வைத்து, பதிவு செய்து தமிழகம் முழுவதும் சப்ளை செய்யப்பட்டது. இதை அறிந்த நடிகர் விஜய் ரசிகர்கள், அந்த வீட்டுக்கு சென்று, அங்குள்ளவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த, சேலம் மேற்கு சட்டம்- ஒழுங்கு உதவி கமிஷனர் சந்திரசேகரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் கமலேசன், எஸ்.ஐ.,க்கள், போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, விஜய் ரசிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை அனுப்பி வைத்தனர்.
அதன் பின், அங்கு சோதனை செய்த போது, "தலைவா படம் பதிவு செய்த, 30 ஆயிரம் திருட்டு "சிடிக்கள் கைப்பற்றப்பட்டது. அது மட்டுமின்றி சிங்கம்- 2 உட்பட பல புதிய படங்கள் மற்றும் ஆபாச பட "சிடிக்களையும் போலீஸார் கைப்பற்றினர். மேலும், "சிடிக்கள் பதிவு செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட, எட்டு சர்வர், 80 ரைட்டர்களையும் போலீஸார் கைப்பற்றினர்.
புதிய படங்களை, சி.டி.,க்களில் பதிவு செய்து, வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வந்த தர்மபுரி மாவட்டம், முத்துப்பட்டியை சேர்ந்த முருகன் மகன் முரளி, 28. மரியம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் குமார், 27. சேலம், அம்மாபேட்டையை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் அருள்பிரபு, 36. ஆகியோரை போலீஸார் கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டு "சிடி தயாரிப்பு கும்பலுக்கு தலைவனாக செயல்பட்ட, சேலத்தை சேர்ந்த ராஜாவை, போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
போலீஸார் மேற்கொண்ட சோதனையில், சேலத்தில் இருந்து, திருட்டு "சிடிக்கள் தமிழகம் முழுவதும் சப்ளை செய்யப்பட்டதற்கான விபரங்கள் அடங்கிய டைரியை கைப்பற்றி உள்ளனர். அதில், உள்ள கடைகளிலும் சோதனை மேற்கொள்ள போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment