ஒரு கார் விபத்தில் சிக்கி கொடூரமாய் அடிபடும் பரத், என பரபரப்பாய் துவங்குகிறது படம். ஆஸ்பத்திரியில் கோமா நிலைக்கு சென்று சிகிச்சை பெற்று குணமாகி வரும் பரத், தன் காதலி மிருத்திகாவை நினைத்து, அவள் நினைவாலேயே வாடிக் கொண்டிருக்கிறார்.
மிருத்திகாவை பார்த்து, பழகிய ஞாபகங்களுக்கு ஆதாரமாக இவர் நினைத்திருந்த அனைத்துமே காணாமல் போய்விடுகிறது. இது எல்லாமே பிரம்மை. மிருத்திகா என்ற ஒரு பொண்ணே இல்லை.
விபத்துக்கு பிறகு உன்னுடைய மூளையில் ஏற்பட்ட சில மாற்றங்கள்தான் இப்படி கற்பனையான சில விஷயங்களை உருவாக்கியிருக்கிறது என பரத்துக்கு சிகிச்சை அளிக்கும டாக்டரும், பரத்தின் அண்ணன் சந்தானமும் சொல்ல, அதை பரத்தால் நம்ப முடியவில்லை.
உருத்தலுடன் மிருத்திகா இருந்த இடத்திற்கு சென்று பார்க்கிறார். அங்கு அவள் இருந்ததற்கான ஆதாரங்கள் பரத்திற்கு கிடைக்கிறது. கூடவே, ஒரு கொலைகார கும்பலும் பரத்தை துரத்துகிறது. அவர்களிடம் பரத் சண்டை போடுகிறார். இந்த சண்டையில் சந்தானம் கொல்லப்படுகிறார்.
இறுதியில், பரத் தன்னை துரத்தும் கொலைகார கும்பல் யார் என்பதை கண்டுபிடித்தாரா? தன்னுடைய காதலியாக நினைத்துக் கொண்டிருக்கும் மிருத்திகா இறந்தாளா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
இந்த படத்தின் ஒட்டுமொத்த விளம்பரத்திற்கும் அடிப்படை பரத்தின் சிக்ஸ் பேக் உடற்கட்டுதான். இவரது உடலில் புடைத்துக் கொண்டு நிற்கும் நரம்புகளும், செதில் செதிலாய் திரண்டு நிற்கும் சதைகளும், இதுவரை நாம் தமிழ் சினிமாவில் பார்த்த சிக்ஸ் பேக் உடற்கட்டுகளையெல்லாம் ரொம்ப சாதாரணமாக்கிவிட்டது. சண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷத்தையும், காதல் காட்சிகளில் ரம்மியத்தையும் கொடுத்திருக்கிறார்.
கதாநாயகி மிருத்திகா, இன்னொரு கேரள வரவு. இவருடய சுவாரஸ்யமான முகமும், முகபாவங்களும் ரசிக்க வைக்கிறது. இன்னொரு நாயகி எரிக்கா பெர்னாண்டஸ். ஒரு பாடலுக்கு நடனமாடிவிட்டு, அப்படியே சில காட்சிகளில் நடித்துவிட்டு இரண்டாவது நாயகிகளுக்கே உரித்தான இலக்கணத்தில் இறந்து போகிறார்.
இயக்குனர் சசி, கஜினி மாதிரியான ஒரு படத்தை எடுக்க நினைத்திருப்பார் போல... அதனால்தானோ கஜினியைப் போலவே ஷார்ட் டைம் மெமரி லாஸில் கதைக்கு தேவையான பல விஷயங்களை மறந்துவிட்டார்.
ஆங்காங்கே டிவிஸ்ட் வைத்தால் படத்தை ரசிக்க வைத்துவிடலாம் என்று நினைத்துவிட்டார் போலும்.
படத்தில் சில காட்சிகள் ரசிக்கும்படியாய் இருந்தாலும், அதையே இழுத்தடித்து கடுப்பேத்தியிருக்கிறார்கள். சசி, பரத்திற்கு 6 பேக் ரெடி பண்ணுவதிலேயே குறிக்கோளாய் இருந்திருக்கிறார் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது. பரத்தின் சிக்ஸ் பேக்குக்காக எடுத்திருக்கும் அசாதாரண முயற்சியில் ஒரு பங்காவது கதை, திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் ஒரு வேளை நல்ல ஆக்சன் படமாய் வந்திருக்கலாம்.
அறிமுக இசையமைப்பாளர் சைமன் இசையில் ‘எழவு’ என்ற பாடல் மட்டும் கவனத்தை ஈர்க்கிறது. ‘முதல் மழைக் காலம்’ பாடல் ரம்மியமாய் இருக்கிறது. மற்ற பாடல்கள் சுமார் ரகம்தான். சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவில் படத்தின் ட்ரைலரே இவரது திறமையை காட்டிவிட்டது. இருப்பினும், படத்தின் ஆரம்பம் முதல் விபத்து காட்சியிலிருந்து, படம் முழுக்க ஆங்காங்கே தன் தனித்திறமையை பதித்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘555’ புகைச்சல்.
0 comments:
Post a Comment