விளையாட்டு காதல், கருவாகி சாதியால், அரசியலால் சித்ரவதைப்பட்டு எப்படி அனாதைகளை உருவாக்குகிறது என்பதை தமிழ்நாட்டில் தற்போது நடக்கும் சாதீய காதலோடு யதார்த்தமாக சொல்ல வரும் படம்தான் ‘ஆதலால் காதல் செய்வீர்’.
நாயகி மனிஷாவிடம் நண்பனாக பழகிவரும் நாயகன் சந்தோஷ், மனிஷாவை ஒருதலையாய் காதலிக்கிறார். ஒருகட்டத்தில் தன் காதலை மனிஷாவிடம் நாயகன் சொல்ல, முதலில் மறுக்கும் மனிஷா, பிறகு அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார்.
இவர்களுடைய காதல் இருவர் வீட்டுக்கும் தெரியாமல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்கிறது. மாமல்லபுரம் சென்று ஒருநாள் இருவரும் தனிமையில் இருக்கிறார்கள். இதனால், மனிஷா கர்ப்பமாகிறாள்.
இந்த விஷயம் வீட்டுக்குத் தெரியாமல் நண்பர்கள் உதவியுடன் அந்த கருவை கலைக்க முயற்சி செய்கின்றனர். ஆனால், அது முடியாமல் போகவே, இருவருடைய பெற்றோர்களுக்கும் இந்த விஷயம் தெரிய வருகிறது.
இவர்கள் ஒன்று சேர முதலில் சந்தோஷின் சாதியும், அவனுடைய சாதியைச் சேர்ந்தவர்களும் தடையாக வருகிறார்கள். சந்தோஷின் அப்பா அரசியலில் பெரும் செல்வாக்குடன் இருப்பதால் மனிஷாவின் பெற்றோர்களுக்கு மிரட்டல் விடுக்கின்றனர்.
இதிலிருந்து தப்பித்து, இவர்களின் காதல் வெற்றி பெற்றதா? இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா? மனிஷாவின் வயிற்றில் உருவான கரு என்னவாயிற்று? என்பதே மீதிக்கதை.
சந்தோஷ், இன்றைய சூழலில் வாழும் யதார்த்தமான வாலிபனுக்குரிய தோற்றத்தில் அழகாக இருக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளில் அசத்தியிருக்கிறார். மனிஷா அட்டகாசமாக நடித்துள்ளார். இவரது நளினமான காதல் மிளிர்ச்சியும், ஆவேசமான பார்வையும் ரசிக்க வைக்கிறது.
மனிஷாவின் அப்பாவாக வரும் ஜெயப்பிரகாஷ் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தன் மகள் களங்கப்பட்டு நிற்கும் போது கண்கலங்கி நம்மையும் கண்கலங்கச் செய்கிறார்.
சந்தோஷின் அம்மாவாக வரும் பூர்ணிமா பாக்கியராஜ் நடிப்பதற்கான வாய்ப்பு குறைவே. அதேநேரத்தில் மனிஷாவின் அம்மாவாக நடித்துள்ள துளசி அன்பு, ஆவேசம் என இரண்டும் கலந்த கலவையாக நடிப்பில் பின்னியெடுத்திருக்கிறார்.
முதல்பாதியில் கல்லூரி காதல், நகைச்சுவை என படம் ஆரம்பித்து, படிப்படியாக தமிழகத்தின் சாதீய காதலை கையில் எடுத்து, படம் பார்ப்பவர்களுக்கு மிகப்பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். ஆனால், கிளைமாக்ஸில் நாம் நினைத்ததைவிட வேறுவிதமாய் முடித்திருப்பதில் சிகரம் தொடுகிறார் இயக்குனர்.
படத்தின் தலைப்பை வைத்து இயக்குனரை எடைபோட முடியாது. சமூக அவலங்களை நையாண்டியுடன் குண்டூசியால் குத்திக் காட்டி, இன்றைய கால சூழலில் வாழும் காதலர்களுக்கு பாடம் புகட்டுகிறார்.
யுவன் சங்கர் ராஜா இசையில், பாடல்களும், பின்னணி இசையும் தாலாட்ட வைக்கிறது. மறைந்த கவிஞர் வாலி எழுதிய ‘தப்புத்தாண்டா’ பாடல் வரிகள் துள்ளல் போட வைக்கிறது. சூர்யாவின் ஒளிப்பதிவு, படத்துக்கு மேலும் வலுசேர்த்திருக்கிறது. பெரும்பாலான காட்சிகள் இவருடைய ஒளிப்பதிவில் மெருகு ஏறியிருக்கிறது.
மொத்தத்தில் ‘ஆதலால் காதல் செய்வீர்’ படம் அல்ல பாடம்.
0 comments:
Post a Comment