பாலா இயக்கத்தில் வெளியான ‘‘பரதேசி‘‘ படம் லண்டனில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் அதிகபட்சமாக 8 விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் லண்டனில் நடக்கும் திரைப்பட விழாக்களில் அதிகளவு விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படமும் இதுதான்.
சேது, பிதாமகன், நான் கடவுள் உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலா கடந்தாண்டு இயக்கிய படம் பரதேசி. பி ஸ்டுடியோஸ் சார்பில் பாலாவே இயக்கி, தயாரித்தார். முரளி மகன், அதர்வா ஹீரோவாக நடித்தார்.
இவருக்கு ஜோடியாக வேதிகா நடித்தார். இவர்களுடன் தன்ஷிகா, இயக்குநர் ஜெர்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். நாடு விடுதலை பெறுவதற்கு முன்னர் ஆங்கிலேயர் நம்மை ஆட்சி செய்தபோது தேயிலை தொழிலாளர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்தது.
குறிப்பாக ரெட் டீ எனும் நாவலை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது. அனைவராலும் பாராட்டு பெற்ற இப்படம் சிறந்த ஆடை வடிமைப்பாளருக்கான தேசிய விருதும் பெற்றது.
8 விருதுக்கு பரிந்துரை
இந்நிலையில் லண்டனில் அக்டோபர் 13ம் தேதி முதல் 18ம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா நடைபெற இருக்கிறது. இதில் அமெரிக்கா, ரஷ்யா, தென் கொரியா, சிலி மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த பல்வேறு நாடுகளில் இருந்தும் பல நாட்டு படங்கள் பங்கேற்று உள்ளன.
இந்தியா சார்பில் நிறைய படங்கள் பங்கேற்கிறது. இதில் தமிழில் பாலா இயக்கிய பரதேசி படமும் பங்கேற்றுள்ளது. இதில் பரதேசி படம், சிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த வெளிநாட்டு படம், சிறந்த வெளிநாட்டு இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை, சிறந்த ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட 8 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பாலா நான்கு விருதுக்கு பரிந்துரை
பரதேசி படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் அவரே என்பதால் சிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த வெளிநாட்டு படம், சிறந்த வெளிநாட்டு இயக்குநர் என நான்கு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
லண்டன் திரைப்பட விழாவில் இந்திய படம் ஒன்று இவ்வளவு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்படுவது இதுவே முதல்முறை, மேலும் இங்கு திரையிடப்படும் வெளிநாட்டு படங்களிலேயே அதிகளவு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட படமும் இதுதான், அதுவும் தமிழ்படம் என்பது கூடுதல் சிறப்பு. இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் வேளையில் பரதேசி படம் இத்தனை விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது மிகப் பெரிய கவுரவமாக கருதப்படுகிறது.
0 comments:
Post a Comment